உத்தமபாளையம்: மாந்திரீகம் செய்து பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி உத்தமபாளையத்தில் பல லட்சம் மோசடி நடந்துள்ளது. அதிமுக கொடியுடன் வந்த காரில் மூளை, கல்லீரல், நாக்கு உள்ளிட்ட உறுப்புகளுடன் 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில் மாந்திரிக கும்பல், மக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பணமோசடியில் மிக நூதன முறையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெயலலிதா படம் மற்றும் அதிமுக கொடியுடன் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட மனித உறுப்புகள், எலுமிச்சை, சூடம், முட்டை போன்றவை இருந்துள்ளது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்து, காரில் இருந்தவர்களை போலீசார் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையில், காரில் இருந்தவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (39), கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் (65) என்பது தெரியவந்தது.
இவர்களுடன் உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ் (52) என்பவர் தொடர்பில் இருந்துள்ளார். ஜேம்ஸ் மீது ஏற்கனவே பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளன. ஜேம்ஸ் இவர்கள் 3 பேருக்கும் அறிமுகமாகி, நள்ளிரவில் பூஜை செய்தால் பணம் கொட்டோ, கொட்டென்று கொட்டும் என்றும், ஒரே இரவில் பணக்காரராக மாறிவிடலாம் என்று கூறியுள்ளார். கேரள மாநிலம் வண்டிப் பெரியாறில் உள்ள ஒருவரிடம் பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதன்படி, இவர்கள் ரூ.2.50 லட்சத்தை அவரிடம் தந்துள்ளனர். அவர் பதிலுக்கு ஒரு சூட்கேஸ் தந்து, இதனை திறக்காமல் மந்திரவாதி ஜேம்ஸிடம் தர வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் வந்ததாக மூவரும் கூறி உள்ளனர். காரில் கைப்பற்றப்பட்ட உறுப்புகள் மனித உறுப்புகளா, அல்லது ஆடு, மாட்டின் உறுப்புகளா என்பதை அறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். இதன் முடிவு வந்தவுடன் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மந்திரவாதி ஜேம்ஸ் பிடிபட்டால் மட்டுமே ஏமாற்றப்பட்ட பணம் எவ்வளவு என தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.