வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் ரவி(50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுக கிளை செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு சோனாலி(21) என்ற மகளும், தனுசூர்யா(19) என்ற மகனும் உள்ளனர். சோனாலி கோவையில் எம்பிஏ 2ம் ஆண்டும், தனுசூர்யா பி.இ., 4ம் ஆண்டும் படித்து வருகின்றனர். நேற்று காலை 6 மணியளவில், அதே பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டின் அருகே, ரவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் தகவலின்படி ஏத்தாப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மதியம் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, ரவிக்கு கல்லீரல் வீக்கம் இருந்ததும், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, யாரும் வந்து சென்றதாக பதிவாகவில்லை. எனினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.