குமாரபாளையம்: அதிமுக மாநாட்டிற்கு சென்றுவிட்டு போதையில் திரும்பிய கணவன், வராண்டாவில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அருவங்காட்டை சேர்ந்தவர் மாது (58). அதிமுகவை சேர்ந்தவர். இவர் இங்குள்ள நெசவு பூங்காவில் லோடிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னம்மாள்(50). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு அருணாச்சலம்(28), பூபதிராஜா(25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அருணாச்சலத்திற்கு திருமணமாகிவிட்டது. அருகில் உள்ள தொழில் பூங்காவில் நெசவாளராகவும், பூபதிராஜா பைனான்சில் மானேஜராகவும் உள்ளனர். மாதுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிமுக நிர்வாகிகள் அழைப்பின் பேரில், மாது மதுரை மாநாட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் ஊர் திரும்பினார். நேற்று 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தவர் வராண்டாவில் படுத்திருந்த பொன்னம்மாளிடம் தகராறு செய்து உள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மாது, மரக்கட்டிலின் காலை உடைத்து பொன்னம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்து போதையில் இருந்த மாதுவை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.