நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏகே சமுத்திரம் பகுதியில், கடந்த 2009ம் ஆண்டு முதல் ராயல் ஹைடெக் சிட்டி என்ற பெயரில் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மாதாந்திர தவணையில் பணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.
தற்போது வரை வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, சேலம் மாவட்டம் வீராணத்தை சேர்ந்த பத்மாவதி (63) என்பவர் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியம், அமமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகிய இருவரும், தன்னிடம் தவனை முறையில் ரூ.1.15 லட்சம் வாங்கி கொண்டு வீட்டுமனை பத்திரபதிவு செய்து கொடுக்கவில்லை, இது பற்றி கேட்டதற்கு 3 பேரை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர் என கூறியிருந்தார். இதன் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரும் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று காலை அவரை, ராசிபுரம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் மோகனபிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவரது உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள அமமுக செயலாளர் பழனிவேலை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ராசிபுரம் அருகே ஏ.கே. சமுத்திரத்தில் நடைபெற்ற நில மோசடி புகார் தொடர்பாக, இதுவரை 7 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதுபோன்று பொதுமக்கள் யாராவது இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி, தற்போது வரை வீட்டுமனை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு இருந்தால் நாமக்கல் மாவட்ட காவல் துறையில் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.