மதுரை: ‘அதிமுக கூட்டணிக்கு நாங்கள் போகவில்லை. எங்கள் கூட்டணிக்குத்தான் எடப்பாடி வந்திருக்கிறார்’ என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். மதுரை கிழக்கு தொகுதி அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் கூறியது சரியான முடிவு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் தேவையான படிப்பிலும் சரி, வேலைவாய்ப்பிலும் உரிய பங்கீடு கிடைக்க வசதியாக இருக்கும். அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை.
எங்கள் கூட்டணியில்தான் எடப்பாடி வந்திருக்கிறார். எங்கள் பங்காளி சண்டையை ஓரமாக வைத்து விட்டோம். பாமகவில் அப்பா – மகன் பிரச்னை முடிந்து பழைய பலத்தோடு, எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி, மேலும் சில புதிய கட்சிகளும் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தது குறிப்பிட்ட நிகழ்வுக்காக தான். இன்று(நேற்று) மதுரை வரும் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கலாம். அவரை சந்திக்க நான் அனுமதி கேட்கவில்லை. இவ்வாறு கூறினார்.
* ‘ஓபிஎஸ், சசிகலாவுக்கு எப்போதும் முக்கியத்துவம்’
டிடிவி.தினகரன் கூறுகையில், ‘ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜ மாநில தலைவர் தினமும் கூறிவருகிறார். ஓபிஎஸ்க்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்களும், உரிமை மீட்பு குழுவும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும். சசிகலா எப்போதுமே பின்புலத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது’ என்றார்.