* தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதற்கு எதிர்ப்பு
சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 15 நாட்கள் நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அந்தந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பலரும், ‘கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்’ என்ற கருத்தை பதிவு செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ”சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுக கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை’ என்று உறுதியாக கூறிவிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில அதிமுக செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டது.
அதன்படி இன்று (16ம் தேதி) அதிமுக செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ‘கொள்கைக்காகவே வாழ்வோம், எதுவந்தாலும் ஏற்போம்’ என்று 2024, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் களம் இறங்கி, கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அதிமுக. மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பை நடத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களின் உடமைகள் பறிக்கப்படுவதும், தொடர் கதையாக மீனவர்கள் வாழ்க்கையில் சோகம் நிறைந்ததாக இருக்கிறது. இத்தகைய நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருந்து வரும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை அரசோடும், மீனவ பிரதிநிதிகளையும் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை அரசால் இந்திய மீனவர்களின் படகுகளை மற்றும் அவர்தம் உடமைகளை பறிமுதல் செய்து இலங்கை அரசே கைப்பற்றிக்கொள்வதற்கு வழிவகுக்கும் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களை காப்பதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் ஒன்றிய அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, ஆக்கப்பூர்வமான முயற்சியில் ஈடுபட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றிட வேண்டும். 2024-25ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. விவசாயிகளுக்கான சில அறிவிப்புகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திறன் மேம்பாட்டு முயற்சி, சிறு குறு தொழில்களுக்கு கடன் வழங்குதல் போன்ற சில அறிவிப்புகள் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், தமிழ் நாட்டை பொறுத்தவரை ரயில்வே துறையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், திட்டங்களை நிறைவேற்றிட முடியாமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள், தொழில் வழி திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், வெள்ளத் தடுப்பு போன்ற திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்படாததில் இருந்து தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. முதியோர்களுக்கு குறைந்தபட்சம் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்து வந்த சலுகைகள் கூட திரும்ப அளிக்கப்படவில்லை.
குறிப்பாக, தமிழ் நாட்டிற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் மத்திய அரசின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வருங்காலத்திலாவது இதுபோன்று பாரபட்சம் காட்டாமல், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறைப்படி ஒதுக்க வேண்டும்.
ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, தலைப்பின் கீழ் மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு தற்போது வசூலிக்கப்படும் 18 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. பொதுவாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான், தங்களின் மருத்துவச் செலவை ஈடுகட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைகிறார்கள். அவ்வாறு மருத்துவச் செலவுகளுக்காக சேமிக்கும் பணத்தை கொண்டு செலுத்தும் பிரீமியத்திற்கு இவ்வாறு 18 சதவீதம் ஜிஎஸ்டி பிடிப்பது ஏற்புடையதல்ல என்பதை அதிமுக வலியுறுத்துகிறது.
எனவே, அனைவரின் கோரிக்கைகளையும் ஏற்று இத்தகைய வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொது சொத்துகளுக்கு பெருத்த சேதமும் ஏற்பட்டுள்ளது. வயநாடு நிலச் சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும். அதே சமயம் அவர்களுக்கான விரிவான மறுவாழ்வு திட்டங்களையும் அறிவிக்க வேண்டும். வரலாறு காணாத இப்பேரிடரை தேசியப் பேரிடராக அறிவித்து, தேவையான அனைத்து நிதி உதவி மற்றும் நிவாரண உதவிகளை ஒன்றிய அரசு காலதாமதம் இன்றி வழங்கிட முன்வர வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.