சிவகங்கை: அதிமுகவின் செயற்குழுவா, புதைக்குழுவா என கேள்வி கேட்டு சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்தது. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி அணிக்கே என கூறிய நிலையில் ஓபிஎஸ் தற்போது பாஜ கூட்டணியில் தனியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தனியாக அதிமுகவை ஒருங்கிணைப்பதாக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் ‘கழகமே, உலகமென வாழும் சிவகங்கை மாவட்ட அதிமுக அடிமட்ட தொண்டர்கள்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், ‘‘அதிமுகவின் செயற்குழுவா, அதிமுகவுக்கு புதைக்குழுவா, கரன்சியா, கழகமா, உள்ளாட்சி மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி காண வேண்டுமா, வேண்டாமா செயற்குழு உறுப்பினர்களே மனசாட்சியோடு முடிவு செய்யுங்கள்’’ என்ற வாசகங்களுடன் இந்த போஸ்டர்கள் உள்ளன. இந்த போஸ்டர்களால் மாவட்ட அதிமுகவினரிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.