சென்னை: முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ ஒளிபரப்பப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்த மாநாடு இந்து முன்னணியின் பெயரில் நடத்தப்பட்டாலும், முழுக்க, முழுக்க பாஜவினரே பணியாற்றினர். இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரது சார்பில் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், ‘அதர்மம் ஒழிக்க..’ என்ற கூறியவாறு பெரியார், அண்ணா ஆகியோரது படங்களை திரையில் காட்டி அவதூறு செய்தனர். இதனை பார்த்த அதிமுக மாஜி அமைச்சர்களும், எம்எல்ஏவும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தது, தமிழ் ஆர்வலர்களிடமும், திராவிட பற்றாளர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முருகன் மாநாட்டில் பங்கேற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்; முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ ஒளிபரப்பப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது.
அதிமுக ஒரு போதும் கொள்கை, கோட்பாடு, லட்சியங்களை விட்டுக் கொடுக்காது. அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாக பேசியவர்களுக்காக எடப்பாடி என்ன முடிவு எடுத்தார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் பங்கேற்றோம். முருகன் மாநாட்டின் தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. மாநாட்டில் நாங்கள் பின் வரிசையில் இருந்ததால் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோவை பார்க்கவில்லை. அண்ணா, பெரியார் குறித்த அவதூறு வீடியோக்களுக்கு எங்களது கண்டனங்களை தெரிவிப்பதுடன், அவர்கள் மீது அவதூறு வரும்பட்சத்தில் அதை எதிர்ப்போம் என்று கூறினார்.