காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, அதிமுக சார்பில் காய்கறி உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து நேற்று காய்கறிகளை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகாமையில் காவலன் கேட் பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சிபுரம் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் சோமசுந்தரம், பகுதி செயலாளர் பாலாஜி ஜெயராஜ், எம்பி ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, வெங்காடு உலகநாதன் ஆகியோர் காய்கறிகளை மாலையாக கோர்த்து மாலை அணிந்து, காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய ெபாருட்களின் விலை உயர்வை கண்டித்து, நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.