Wednesday, April 24, 2024
Home » என் வரலாறு தெரியாம அதிமுகவில் என்னை ஏளனம் பண்றாங்க: பீல் பண்ணும் மன்சூர் அலிகான்

என் வரலாறு தெரியாம அதிமுகவில் என்னை ஏளனம் பண்றாங்க: பீல் பண்ணும் மன்சூர் அலிகான்

by Karthik Yash

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி நிறுவனரும், நடிகருமான மன்சூர் அலிகான், சென்னையிலுள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: நான் யாரிடமும் கடன் வாங்கியது இல்லை. ஆனால், என்னிடம் கடன் வாங்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் கூட அவர்கள் எனக்கு திருப்பி கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட வரலாறு கொண்ட என்னை பார்த்து, ‘இவனை எல்லாம் அதிமுக கட்சியில் சேர்த்து எம்பி சீட் கொடுப்பதா?’ என்று அதிமுகவிலே குறிப்பிட்ட சிலர் ஏளனம் செய்கிறார்கள். அதிமுக என்பது மாபெரும் இயக்கம். அதனுடன் எனது கட்சி கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான் வேலூர் தொகுதியில் எம்பி சீட் கேட்டுள்ளேன். இன்னும் ஒதுக்கவில்லை. அவர்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் நான் வேலூரில் போட்டியிடுவேன். மேலும், ஆரணி உள்பட 5 தொகுதிகளில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி போட்டியிடுகிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சியை தொடங்கியுள்ளோம். எனவே, என்னை யாரும் தரம் தாழ்த்தி பேச வேண்டாம். மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாஜ கட்சியை தமிழகத்தில் காலூன்ற விட மாட்டேன். இதற்காக அவர்கள் என் வீட்டில் ரெய்டு நடத்தினால் கூட கவலைப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

* பிரதமர் மோடிக்கு இந்தியில் பதிலடி
மன்சூர் அலிகான் கூறுகையில், ‘இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு இயக்கத்தை இங்க வேரூன்ற நாங்க விட மாட்டோம். நீ எங்க இருந்து வந்த.. உன் பாரம்பரியம் என்ன… இன்னைக்கு சிஏஏனு போட்டு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து இருக்கீங்க. உங்க குடியுரிமை என்ன. நீங்க எங்க இருந்து வந்து இருக்கீங்க. என் முப்பாட்டன் 800 வருஷம் இந்த நாட்ட ஆண்டு இருக்கான். இந்த நாட்டின் பூர்வ குடிகள் நாங்க. நான் முஸ்லிம மட்டும் சொல்லல.. தாழ்த்தப்பட்ட மக்களையும் தான் சொல்கிறேன். இடையில ஒரு தொலைகாட்சியில பார்த்தேன். அதுல பிரதமர் மோடி சொல்றாரு. மேரா பாரத், மேரா பரிவார் என்னு. இப்படி ஒரு பிரதமர் மோடி வெறியோட பேசுகிறார். அதுக்கு அர்த்தம் என்னனா ‘என் பாரதம் என் குடும்பம்னு’ சொல்கிறார். இப்போம் நானும் சொல்கிறேன். அத நீங்க தொலைக்காட்சியில் போடுவீங்க. அமாரா பாரத்.. அமாரா பரிவார். இந்து, முஸ்லிம், சீக், சாகி சப்தா சான் இந்தியா கே மகான்.. இந்தியா மகான், அமார பாரத், சப்காஸ் விகாஸ். இதுதான் இஸ்துஸ்தான்,’ என்று இந்தி மொழியில் பேசி பிரதமர் மோடிக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

* ‘கிளிய வளர்த்து பாழுங்கிணற்றுல தள்ளிட்டியே நாட்டாம’
சரத்குமார் தனது கட்சியான சமகவை பாஜவில் இணைத்ததற்கு சொந்த கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், மன்சூர் அலிகானிடம் நேற்று சரத்குமார் பாஜவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘கிளிய வளர்த்து பாழுங்கிணற்றுல தள்ளிட்டியே நாட்டாம. சரத்குமார் ஒரு நடிகர். எனக்கு மூத்தவர். அப்புறம் நடுராத்திரல பொண்டாட்டிய ஏன் எழுப்பி கேட்லனுலாம் கேட்க கூடாது’ என நகைச்சுவையாக பதிலளித்தார்.

* முரசு சின்னம் கேட்ட சீமான்: எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாரு… அது எங்க சொத்து; விஜய பிரபாகரன் பதிலடி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த முறை கிடையாது என தேர்தல் ஆணையம் கைவிரித்தது. இந்நிலையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயகாந்த் தோற்றுவித்த தேமுதிகவும் வரிசையாக தோற்பதாகவும், அந்தக் கட்சியின் சின்னத்தை தனக்கு தருமாறும் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமான் அண்ணன் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாரு. அவரு நம்ம முரசு சின்னத்தை கேட்டிருக்கிறார். சீமான் அண்ணனிடம் ஒன்னு சொல்லிக்கிறேன். பிரபாகரன் சொன்னால் சீமான் கேட்பார்னு எனக்கு தெரியும்.

இப்போ இந்த பிரபாகரன் சொல்றேன். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல், தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது என்று கூறினார். மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, சாதியைப் பார்த்து வாக்களிப்பது என்று இருந்து விடக்கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும். தமிழை மட்டுமே கற்றுக் கொண்டால், தமிழகத்தில் மட்டுமே இருக்க முடியும். இந்தி, ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi