மேலூர்: ‘ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் சேர 6 மாதம் அமைதியாக இருக்க வேண்டும்’ என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கூறியுள்ளார். மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மேலூர் அருகே திருவாதவூரில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் திண்ணை பிரசாரம் நேற்று நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் அதிமுகவில் இணைவது குறித்து ரகசியமாக கருத்து தெரிவிக்காமல், பொது வெளியில் பேச வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு ஜார்க்கண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கவர்னராக ஆகும் தகுதி உள்ளது. ஏற்கனவே கட்சியில் இணைக்கப்பட்டபோது துணை முதல்வர் பதவி உள்ளிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதிமுக மற்றும் இரட்டை இலையை முடக்க நினைத்து நீதிமன்றம் சென்று விட்டு, தற்போது இணைவதை பற்றி பொது வெளியில் பேச வேண்டிய அவசியம் என்ன?.
அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் சேர்வதாக இருந்தால் 6 மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும். வழக்கு தொடர்வது போன்ற எந்தவித இடையூறும் செய்யாமல் இருந்தால், கட்சியில் மீண்டும் இணைப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவோம். மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசி நடவடிக்கை எடுப்போம். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். அவரை பார்த்து வந்தவர்கள் பலர், இன்று பல கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். அவர் எப்போதும் அதிமுகவுக்கு எதிராக செயல்பட மாட்டார். கட்சியில் அவர் எப்பொழுதும் தளபதியாக இருந்து வழி நடத்தி செல்வார்.இவ்வாறு கூறினார்.