வாழப்பாடி: வாழப்பாடி அருகே அதிமுக நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவி (50). இவர் அதிமுக கிளை செயலாளராக இருந்தார். இவரது மனைவி புவனேஷ். இவர்களது மகள் கோவையில் எம்பிஏ இரண்டாம் ஆண்டும், மகன் பிஇ நான்காம் ஆண்டும் படித்து வருகின்றனர். ரவி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் அதேபகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டின் அருகே ரவி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவரது உடலில் தலை, முதுகில் காயங்கள் காணப்பட்டது. மேலும் கண் அருகே ரத்த கசிவு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், ரவியை மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கொலை செய்தனரா? அல்லது காலை நேரத்தில் தான் கொலை நடந்ததா? நேற்றிரவு வீட்டிற்கு ரவி சென்றாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்துள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.