கோவை: ‘‘யாருக்கு யார் எதிரி என்று மக்களிடம் கேளுங்க… தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி’’ என அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கும் பாஜவிற்கும்தான் போட்டி என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவர் அப்படி கூறுகிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் அவரைத்தான் கேட்க வேண்டும். யார் யாருக்கு எதிரி என்று மக்களிடம் கேளுங்கள். மக்கள் தெளிவாக சொல்வார்கள்.
அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. தமிழ்நாட்டில் பாஜவுக்கு 2வது இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள்தான் எதிர்கட்சி. பாஜ மேலிடத்தில் இருந்து பேச்சுவார்த்தை ஏதேனும் நடைபெறுகிறதா? என்ற கேட்கிறீர்கள். அது ஒருபோதும் கிடையாது. அதிமுக ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து அறிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வி.பி. துரைசாமி கூறுகின்ற கருத்திற்கு நாங்கள் பொறுப்பாளி ஆக முடியாது. தினம்தோறும் இது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது? இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிருபர்கள் டெல்லியில் இருந்து மோடி, அமித்ஷா பேசினால் பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, ‘என்ன விதத்தில் கேள்வி கேட்கிறீர்கள் என புரியவில்லை’ என்றார்.
நிருபர்கள்: மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தி பிரசாரம் செய்வீர்கள்?
எடப்பாடி: பல மாநிலத்தில் உள்ள கட்சிகள் பிரதமர் வேட்பாளரையே அறிவிக்கப்படவில்லையே.
நிருபர்கள்: அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுவிட்டதா? யாரெல்லாம் கூட்டணியில் சேருவார்கள்?
எடப்பாடி: கட்சிகள் வரும். வரும்போது தெரிவிப்போம். தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் இருக்கிறது. அப்போது எந்தெந்த கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேரும் என்பதை கூட்டணி கட்சிகள் எங்களுடன் இணையும்போது தெரியப்படுத்துவேன். அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி வலிமையான கூட்டணியாகவும் வெற்றி கூட்டணியாகவும் அமையும். எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதிக நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை. தமிழ்நாட்டு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகதான் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்பதை இந்நேரத்தில் உணர்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* காவிரி நீரை தரக்கூடாது என்கிறது கர்நாடக பாஜ
எடப்பாடி கூறுகையில், ‘பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய தேசிய கட்சிகள் அந்தந்த மாநில பிரச்சனைகளைதான் அவர்கள் முன்னெடுக்கிறார்கள். உதாரணமாக, கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குகிறதா?, இங்கே இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் தண்ணீர் வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் அங்கே இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசாங்கம் தண்ணீர் விடுவதில்லை. இங்கு இருக்கக்கூடிய பாஜ தண்ணீர் வேண்டும் என்கிறது. அங்கிருக்கக்கூடிய பாஜ தண்ணீர் திறந்து விடக்கூடாது என்கிறது. இதுதான் தேசிய அரசியல். அதற்காகத்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம்’ என்றார்.
* அட்ரஸ் இல்லாமல் காணாமல் போவார் டிடிவி.தினகரன்
‘டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அவருக்கு நாங்கள் பதில் சொல்வதில்லை. அவரது கட்சியை ஒரு கட்சியாக நாங்கள் பார்ப்பதில்லை. இந்த தேர்தலோட அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும். விலாசம் இல்லாத கட்சியாக அவரது கட்சி போய்விடும். தொடர்ந்து அதிமுகவில் சிறுபான்மையினர் சேர்ந்து வருகின்றனர்’ என்று எடப்பாடி தெரிவித்து உள்ளார்.