* கோவை எஸ்ஐ மணிதுரை சிக்கினார்
* குவியும் புகார்களால் அடுத்தடுத்து சிக்கும் அஜய் வாண்டையார்
சென்னை: அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் மோசடிக்கு உடந்தையாக சட்ட விதிகளை மீறி செல்போன் டவர் லொக்கேஷன் எடுத்து கொடுத்ததாக எம்.பி. ஒருவரின் தனி பாதுகாவலரான ஆயுதப்படை காவலர் செந்தில் குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்காக பல லட்சம் ரூபாய் வரை கைமாறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கோவை காவல்துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மணிதுரையை கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் பிரசாத் (33), அதிமுக தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி. இவர் கடந்த 22ம் தேதி தனது நண்பரான இசிஆரில் தூண்டில் உணவகம் நடத்தி வரும் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ராஜா, கணேஷ்குமார் (42), தனசேகரன் (29) உள்ளிட்டோருடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து இருக்கையில் மது அருந்திக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பியின் மகன் செல்வபாரதி என்பவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜா படுகாயமடைந்தார். அதேநேரத்தில் செல்வபாரதியும் காயமடைந்தார்.
இந்த தகராறு குறித்து அதிமுக நிர்வாகி பிரசாத் மற்றும் ராஜா ஆகியோர் நண்பரான அதிமுக நிர்வாகியான அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, அஜய் வாண்டையார் மற்றும் சுனாமி சேதுபதி தலைமையிலான ரவுடிகள் கும்பல் விரைந்து வந்து தனியார் மதுபான பாரை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து பார் மேலாளர் வெங்கட் குமார் அளித்த புகாரின்படி அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத், அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், அவரது நண்பரான ரவுடி சுனாமி சேதுபதி, கணேஷ்குமார், தனசேகரன் மற்றும் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அஜய் வாண்டையார் மீது ஐதராபாத் தொழிலதிபர் ஒருவர் ரூ.2.11 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். அதேபோல் அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் மீது அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுபோல் அஜய் வாண்டையார் மற்றும் பிரசாத் மீது மோசடி புகார்கள் குவிந்து வருகிறது. இந்த புகார்களின் அடிப்படையில் இதுவரை 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பிரசாத்திடம் நடத்திய விசாரணையில், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும், தென் மாவட்ட அதிகாரிகளின் ஆதரவுடன் தனி அரசாங்கத்தையே சென்னையில் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதற்காக அதிமுக தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத் அதிமுக ஆட்சியின் போது அஜய் வாண்டையாருடன் சேர்ந்து பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமானது. தென் மாவட்டங்களில் தொழிலதிபரை மிரட்டவோ அல்லது பணம் கேட்டு கடத்தவோ சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், பிரசாத் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மதுரை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் செந்தில் குமார் என்பவர் மூலம் ‘டவர் லொக்கேஷன்’ எடுத்து கொடுத்து வந்துள்ளார்.
அதன்படி இருவரும் தனது ரவுடி நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த சுனாமி சேதுபதி தனது கூலிப்படை மூலம் சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் மூலம் ரொக்கமாக ஆயுதப்படை காவலர் ெசந்தில் குமாருக்கு பணம் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக காவல்துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க அவர்கள் பயன்படுத்தும் செல்போன் டவர் லொக்கேஷனை பார்ப்பது வழக்கம்.
அதுவும் எந்த வழக்கிற்கு என்று கடிதம் மூலம் அளித்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட டவர் லோக்கேஷன் பார்க்க உயர் அதிகாரிகள் அனுமதி வழங்குவார்கள். அப்படி இருக்கும் போது, ஆயுதப்படையில் பணியாற்றி வரும் செந்தில் குமார் அயல் பணியாக தற்போது எம்பி சு.வெங்கடேசனின் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி டவர் லொக்கேஷன் பார்க்கும் பிரிவு அதிகாரிகள் உதவியுடன் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதுரை சென்று ஆயுதப்படை காவலரான செந்தில்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் முன்னிலையில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர். அதேபோல் பிரசாத் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதற்கும் ஆயுதப்படை காவலர் செந்தில் குமார் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம், இந்த மோசடி கும்பலுக்கு பல வகையில் உடந்தையாக கோவை காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மணிதுரை என்பவர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
அதைதொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் கோவையில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் மணிதுரையை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, எந்தெந்த மோசடிகளுக்கு இவர் உதவி செய்துள்ளார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதியானதால் அவரையும் கைது செய்தனர். விசாரணையின் இறுதியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடத்திய விசாரணையில் அதிமுக நிர்வாகிகளான அஜய் வாண்டையார், பிரசாத், ரவுடி சுனாமி சேதுபதி, உணவக உரிமையாளர் ராஜா உள்ளிட்டோர் நேரடியாக ஈடுபட்டிருப்பதும் உறுதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
* அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் மீது அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அஜய் வாண்டையார் மீதும் மோசடி புகார்கள் குவிந்து வருகிறது.
* அதிமுக தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத் அதிமுக ஆட்சியின் போது அஜய் வாண்டையாருடன் சேர்ந்து பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
* அதிமுக ஆட்சியில் நடந்த மெகா மோசடி
இந்த மோசடி அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து நடந்து வந்துள்ளது. அதன் மூலம் பல கோடி ரூபாய் பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, உணவக உரிமையாளர் ராஜா ஆகியோர் சம்பாதித்து, உணவகம் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.