சென்னை: ‘‘நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை, மதுரையில் குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கை 378ல் இருந்து 616 ஆக அதிகரித்துள்ளது’’ என்று கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணக்கு தணிக்கை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டத்தில் 2015 முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முழுமையான திட்டமிடுதலின் தன்மை, உள்கட்டமைப்பு வசதிகள், பயனாளிகளை அடையாளம் காண்பது, பயனாளிகளின் பங்கை நிர்ணயம் செய்வது, குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வது மற்றும் அதன் பயன்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுடன் வீட்டு வசதிகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்வதற்காக, ஜூலை 2021 முதல் ஜனவரி 2022 வரையில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாநிலத்தில் மொத்தம் 13.92 லட்சம் வீடுகள் தேவை இருக்கும்போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 2015- 2021 காலகட்டத்தில் 7.08 லட்சம் வீடுகளை மட்டுமே கட்ட மட்டுமே அனுமதி பெற்றிருந்தது. இதில் 3.44 லட்சம் வீடுகளின் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டும், 3.64லட்சம் வீடுகளின் கட்டுமானப்பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளது. இந்நிலையில், பயனாளிகள் வாங்கும் திறனுக்கேற்ப தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தும் கொள்கையை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், மார்ச் 2020ல் மாநிலக் கொள்கையை உருவாக்கிய பிறகு, தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம் 1971ல் திருத்தம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. நிறுவன கட்டமைப்பு, ஆணை, பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள். வீட்டுவசதிக் கொள்கை நோக்கங்களை அடைவதற்கான திட்டங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும் என்று அரசு 2022ம் ஆண்டு பதிலளித்தது. கொள்கை மற்றும் சட்ட திருத்தம் ஆகியவை பணியின் தொடக்க கட்டத்தில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதால் பதில் ஏற்கத்தக்கது அல்ல.
அவ்வாறு செய்யத் தவறியதால், தனியார் கூட்டாண்மை மற்றும் நிதியுதவி போன்ற முக்கிய வீட்டுத் திட்டங்களுக்கான தீர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை முறையே 2011 மற்றும் 2016ல் கொள்கையை வகுத்துள்ளன. மேலும் 2019-21ம் ஆண்டுகளில் கூட்டு திட்டங்களில் பயனாளிகள் வாங்கும் திறனுக்கேற்ப வீடுகள் ஏற்படுத்தும் வருடாந்திரத்திட்ட முன்மொழிவுகளை 19.81 சதவீதம் மட்டுமே மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 78 நகரங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது.
மேலும் அனைவருக்கும் உடனடியாக வீட்டுவசதி செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை மற்றும் அனைவருக்குமான வீட்டுவசதி செயல் திட்டம் மார்ச் 2021 வரை சமர்ப்பிக்கவில்லை. வருடாந்திர திட்டத்தில் மார்ச் 2022ம் ஆண்டு வரை அனுமதிக்கப்பட்ட குடியிருப்புகளின் கட்டுமானப்பணிகள் நீட்டிக்கப்பட்ட காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றும் மார்ச் 2022க்கு மேல் கூடுதல் ஒப்புதல் வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனைகளுடன் இத்திட்டம் டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
ஜனவரி 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட அனைவருக்கும் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் செயல்பாட்டிற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களில் வீட்டுவசதி தேவை கணக்கெடுப்பு நடத்தப்பட வலியுறுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட திட்ட தேவைகளைப் பெற திட்ட வாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கணக்கெடுப்பிற்கான அத்தியாவசியத் தேவை இருந்தபோதிலும், மார்ச் 2018க்குப் பிறகு. எந்தவிதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளில், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று நகரங்களில் குடிசைப்பகுதிகளின் எண்ணிக்கை 376ல் இருந்து 616 ஆக அதிகரித்து உள்ளது. மூன்று நகரங்களில் குடிசைகள் 378ல் இருந்து 616 ஆக அதிகரித்தது மொத்தம் 62.96 சதவிகிதமாகும், குடும்பங்களின் வளர்ச்சி 65.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குள், சென்னை மற்றும் கோவையில் குடிசைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையில் ஏற்றுக்கொள்ள முடியாத குடிசைகளின் எண்ணிக்கையில் 91.91 சதவீதம் வேகமாக அதிகரிப்புடன், சென்னையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் 73.69 சதவீதம் அதிகரிப்புடன் இருந்தது.
மதுரையில் ஏற்றுக்கொள்ள முடியாத குடிசைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும், குடும்பங்களின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த தேவையான 13.92 லட்சம் குடியிருப்புகளில் 24 சதவீதம் மட்டுமே அதாவது, 3.44 லட்சம் குடியிருப்புகள் முடிக்கப்பட்டுள்ளது. 2015-16 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேவையை பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட இந்த இடைவெளி, குடிசைகளின் தொடர்ச்சியான இருப்பு மட்டுமின்றி, குடிசை பகுதிகள் அகற்றப்பட்ட போதிலும் குடிசைகளின் அதிகரிப்புக்கும் பங்களித்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.