சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு திருத்த மனுவை தாக்கல் செய்துள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டு கையெழுத்திட்டவர்கள் பலர் போலியானவர்கள், எனவே இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ததை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி வேல்பிரகாஷ், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் முதலில் அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால், தற்போது தவறாக அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, இதை மாற்றி புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்று தெரிவித்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம், திருத்தங்களுடன் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் பட்டியலிடப்படவில்லை என்றார். இதையடுத்து, வழக்கை நீதிபதி 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.