தஞ்சாவூர்: அதிமுக என்ற குப்பையை ஒழித்தால் தான் விஷபாம்பு என்ற பாஜவை ஒழிக்க முடியும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தஞ்சாவூர் திலகர் திடலில் தஞ்சாவூர் மாவட்ட வடக்கு – மத்திய – தெற்கு திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு அதிமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் நீட் தேர்வை எதிர்ப்போம் என சொல்லிக் கொண்டிருக்கும் அதிமுக, இதற்கு ஆதரவு தரவில்லை. நீட்தேர்வை எதிர்ப்போம் என சொல்லி கொண்டிருக்கும் அதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டி அடிப்போம். அப்போது உதயநிதி ஸ்டாலின் ஒரு குட்டிகதை சொன்னார். ஒரு வீட்டிற்கு அடிக்கடி விஷபாம்பு வந்து கொண்டிருந்தது. அதனை அடித்து வெளியே போட்டாலும், மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் வந்தது. வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது தான் குப்பை கிடந்தது தெரியவந்தது.
குப்பைக்குள் ஒளிந்து கொண்டு தான் பாம்பு வீட்டிற்குள் வந்திருக்கிறது. குப்பையை ஒழித்தால்தான் பாம்பை ஒழிக்க முடியும். அதேபோல் வீடு என்பது தமிழ்நாடு. குப்பை என்பது அதிமுக. விஷப்பாம்பு பாஜக. எனவே அதிமுக என்ற குப்பையை ஒழித்தால் தான் விஷபாம்பு என்ற பாஜகவை ஒழிக்க முடியும். 2021ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் இருந்த அடிமைகளை துரத்தி அடித்தது போல், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளையும், அவர்களின் எஜமானர்களையும் துரத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.