மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தென்வடல் காகிதப்பட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். 12வது வார்டு அதிமுக செயலாளர். இவரது மனைவி சத்யா. அதிமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர். இவர்களது மகன் ஜெயநாராயணன்(38). எலக்ட்ரீசியனான இவருக்கு, நந்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பந்தலடி வழியாக தனது வீட்டுக்கு ஜெயநாராயணன் நடந்து சென்றார்.
அப்போது சார்பதிவாளர் அலுவலகம் எதிர்புறம் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அதில் ஒரு நபர், ஜெயநாராயணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த சிலர், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர், பவுண்டு சந்து வழியாக வீட்டுக்கு ஜெயநாராயணன் நடந்து சென்றார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 பேர், திடீரென ரீப்பர் கட்டையால் ஜெயநாராயணன் தலையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
பின்னர் அவரது முகத்தில் பாறாங்கல்லை தூக்கி போட்டுவிட்டு 2 பேரும் பைக்கில் தப்பி சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள், ஜெயநாராயணனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மன்னார்குடி நகர போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த நம்பிராஜன் (30), நெடுவாக்கோட்டையை சேர்ந்த பீர்முகம்மது (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.