புழல்: அதிமுக நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக, 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்திபன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணை செயலாளராகவும் இருந்தார். இவர், கடந்த 17ம் தேதி காலை பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் விளையாட்டு திடல் அருகே நண்பர்களுடன் நடைபயிற்சி செய்தபோது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், பார்த்திபனை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும், ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக, வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன், அரக்கோணத்தை சேர்ந்த சங்கர், மணலி பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் ஆகியோர் நேற்று ஆற்காடு நீதிமன்றத்திலும், ராயபுரம் பகுதியை சேர்ந்த மோகன் மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சேலம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி அந்த 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, செங்குன்றம் போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகே, முன்விரோதம் காரணமாக பார்த்திபன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது தெரிய வரும், என போலீசார் தெரிவித்தனர்.