விராலிமலை: புதுக்கோட்டை அருகே மாஜி அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் இருந்திராபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைமான்பட்டி என்ற இடத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நீச்சல் குளம் தொட்டி பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற மேட்டுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாலாயி (83) கால் தவறி அந்த நீச்சல் குளம் தொட்டிக்குள் விழுந்தார்.
இதில் மூச்சு திணறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பாலாயி உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூதாட்டி மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.