சென்னை: அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என டிடிவி.தினகரன் கூறினார். சென்னை ராமாபுரத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம், அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
மக்களவை தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்தினால் வட மாநிலங்களுக்கு கிடைப்பது போன்று விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கும் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும். ஒன்றிய அரசு அதுதொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனால் நாம் குடும்ப கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம் என்பதால் எந்த பாதிப்பும் வராது.
வடமாநிலங்களுக்கு எந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கை உயர்கிறதோ அதே எண்ணிக்கையில்தான் தமிழகத்திற்கும் உயரும் என்பதைதான் அமித்ஷா கூறுகிறார். அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைப்பது தொடர்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.