சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் கே.சி.சுரேன் பழனிச்சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022 ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது.
இதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், திருத்தப்பட்ட கட்சி விதிகளையும், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராகவும் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய கோரியும் தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளோம்.
அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து, அவற்றை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.