புழல்: புழல் அருகே அதிமுக வட்டச் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் மண்டலம் 23வது வட்டம், புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சபாபதி (47). இவருக்கு, பாலலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதிமுக வட்டச் செயலாளரான சபாபதி நேற்று வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முன்றுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காததால், அவரது மனைவி பாலலட்சுமி கதவைத் திறந்து பார்த்தபோது, கணவர் பேனில் நைலான் கையிறால் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளார். அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தூக்கிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சபாபதியை மீட்டு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சபாபதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், சபாபதி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.