சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 4ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நீண்ட போராட்டத்துக்கு பிறகு அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே ஓரங்கட்டப்பட்டு விட்டார். இனிமேல் அவரால் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் என அனைத்தும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது.
இதையடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கடந்த மாதம் 20ம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டினார். ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கு அதிகம் உள்ள மதுரையில் மாநாடு நடைபெற்றதால், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் அவர்கள் சார்ந்த மாவட்டத்துக்கு பொறுப்பேற்று மாநாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மாநாட்டில் அதிகளவில் தொண்டர்கள் கலந்து கொண்டாலும், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விஷயத்தில் அதிமுகவினர் கோட்டை விட்டனர். இதனால் தொண்டர்களிடம் பெரியளவில் அதிருப்தி ஏற்பட்டது. அடுத்தக்கட்டமாக வருகிற 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு தயாராக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் அதிமுக கட்சியுடன் யார் யார் கூட்டணியில் இடம்பெற வேண்டும், அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 4ம் தேதி (திங்கள்) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகின்ற 4ம் தேதி (திங்கள்) காலை 9.30 மணிக்கு, தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மதுரையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற அதிமுக மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டு குழுவினர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டிய மாநாட்டு குழுவினருக்கு நன்றி தெரிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். மேலும், வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவும் அதிமுக சார்பில் எடுக்கப்படவில்லை. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றியும், ஜெயலலிதா பற்றியும் தொடர்ந்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார். இதற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அதிமுக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
ஆனால் டெல்லி பாஜ தலைமை, தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. அதனால், வருகிற 4ம் தேதி நடைபெறும் அதிமுக தலைமை கழக செயலாளர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து முக்கிய வியூகம் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, அதிமுக – பாஜ கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.