அலங்காநல்லூர்: பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், மாவுத்தம்பட்டியை சேர்ந்தவர் சந்திரபாண்டியன் (46). விவசாயி. அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக வார்டு கவுன்சிலர். நேற்று காலை நத்தம் அருகே லிங்கவாடியில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு சென்றார். பின் அங்கிருந்து புறப்பட்ட அவர், மதுரை மாவட்டம், பாலமேடு அருகே கருப்பன்குளம் கண்மாய் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது. தகவலறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சந்திரபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.