மதுரை: அதிமுக மாநாட்டில் வீணாக்கப்பட்ட உணவுகள் குவியல் குவியலாக டன் கணக்கில் கீழே கொட்டப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. மதுரை வளையன்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அழைத்து வரப்பட்டவர்களுக்கு 300 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 3 வேலையும் உணவு வழங்கப்பட்டது. மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பல கவுண்டர்களில் வழங்கப்பட்ட உணவில் தரமில்லை என்றும் சரியாக வேகவில்லை என்றும் புகார் கூறிய தொண்டர்கள், உணவை கீழே கொட்டி சென்றனர்.
இந்த நிலையில் சமையல் பாத்திரங்களை எடுக்க வந்த பணியாளர்கள், டன் கணக்கில் கொட்டிக்கிடந்த உணவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை உணவுக்காக திண்டாடும் மக்கள் இருக்கும் நாட்டில் இவ்வளவு உணவை வீணாக்க ஒரு அரசியல் கட்சிக்கு எவ்வாறு மனம் வந்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அறுசுவை உணவு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு புளியோதரை, சாம்பார் சாதம் மட்டுமே வழங்கியதால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள், உணவை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
மேலும் உணவில் தரமில்லை என்ற புகாரை மறுத்துள்ள சமையல் ஒப்பந்ததாரர், சூடாக வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தை விரும்பி உண்டவர்கள், மற்ற உணவுகளை தவிர்த்ததால் அவை எஞ்சியதாக தெரிவித்துள்ளார். விமான நிலையம் அருகே இதுபோன்று உணவை குவித்து வைத்திருப்பதால் அவற்றை உண்ண ஏராளமான பறவைகள் வர வாய்ப்புள்ளது. இதனால் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.