சென்னை: நடைபயணத்தில் இருக்கும் பாஜ தலைவர் அண்ணாமலை நாளை திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை திடீர் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை அவசர பயணமாக நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அளித்த பேட்டியில் ‘’அண்ணாமலை எங்களுக்கு ”Just like” அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?’’ என்று விமர்சித்திருந்தார்.
இது அண்ணாமலைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, பாஜக தலைவர் அண்ணாமலை, “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது. மேலும் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. மக்களை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களே எங்களுக்கு எஜமானர்கள்” என்றார். இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜ மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.
இதற்கும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்தார். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராகப் பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர், இன்றைக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லாப் பதவிகளும் படிப்படியாகத்தான் வந்தன.
என்னைப் பொருத்தவரை அண்ணாமலையின் கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை. எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான். அதிமுகவை விமர்ச்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்றும் கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக-பாஜக உறவில் விரிசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலையடுத்தே அண்ணாமலை மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடைபயணத்தில் இருந்த அண்ணாமலை திடீரென டெல்லி செல்ல உள்ளது தமிழக பாஜவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.