நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணியம். இதில் பழனிவேல் அமமுகவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது பங்குதாரரான பாலசுப்ரமணியம் அதிமுகவின் ராசிபுரம் நகர செயலாளராக உள்ளார். இவர் ஏற்கனவே ராசிபுரம் நகர்மன்ற தலைவராக இருந்துள்ளார். இவர்கள் மீது நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்த பத்மாவதி(63) என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அதன் விபரம்: ராசிபுரத்தை சேர்ந்த பழனிவேல் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் கூட்டாக ஹைடெக் சிட்டி என்று சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ஏ.கே. சமுத்திரம் என்ற இடத்தில் நிலம் இருப்பதாகவும் மாத தவணையில் வீட்டுமனை பிரிவு தருவதாக கூறி நம்ப வைத்தனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2009 முதல் 2010ம் ஆண்டு வரை மாத தவணை செலுத்தி, அதற்கான ரசீதும் பெற்றுள்ளேன்.
50வது தவணை முடிவில், ரூ.1.15 லட்சம் செலுத்தியுள்ளேன். அதற்கான ரசீது மற்றும் தவணை விவரங்கள் புகார் மனுவில் இணைத்துள்ளேன். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு பழனிவேல் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர், எனக்கு ராயல் சிட்டி ஹைடெக் தவணை முறை பிளாட் ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்தனர். இந்த பிளாட்டின் கிரைய பத்திரம் நகலும் உள்ளது. 2013ம் ஆண்டுக்கு பின், தொடர்ச்சியாக இருவரிடமும் தொடர்பு கொண்டு நான் கட்டிய பணத்திற்கு எனக்கு வீட்டுமனை கிரயம் செய்து கொடுக்கும்படி பல முறை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு கேட்டேன். ஆனால் இருவரும் சரியான பதில் கூறாமல், காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் சிட்டி அலுவலகத்தில் நான் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 3 பேர், என்னிடம் வந்து நீ கேட்ட உடன் உனக்கு கிரயம் செய்துதர வேண்டுமா எனக்கூறி மிரட்டினர். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது. என்னிடம் பணம் பெற்றுகொண்டு, நிலத்தை கிரயம் செய்து தராமல் ஏமாற்றிய பழனிவேல் மற்றும் பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு வீட்டு மனை கிடைக்க செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகார் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு பாலசுப்பிரமணியத்தை நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு விசாரணைக்கு போலீசார் அழைத்துவந்தனர். விசாரணை முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறுகையில், ‘நில மோசடி வழக்கில் பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பழனிவேலை தேடி வருகிறோம்’ என்றார்.