மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘‘அதிமுகவில் பிரச்னை ஏற்பட்டுள்ளதே?’’ என்றனர். அதற்கு அவர், ‘‘அதிமுக ஒன்றுபடணும், வளரணும். அதுக்கு நீங்கள்லாம் பேசுங்க? ஒரு சின்ன சம்பவம் நடக்குதுன்னா அதைப் போயி பேசுறீங்களே? ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பிக்குள்ளே எவ்வளவோ பிரச்னை வரும்.. ரெண்டு பேரும் ஒன்னாகுறாங்க இல்லீங்களா?’’ என்றார்.
உடனே நிருபர்கள், ‘‘அதிமுகவில் உள்கட்சி விவகாரங்கள் தலை தூக்கி இருக்கிறதே?’’ என்றதற்கு, செல்லூர் ராஜூ, ‘‘ஒரு தூக்கலும் தூக்கல.. உறுதியாக, இறுதியாக சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 2 அணிகளாக அதிமுக இருந்தபோது சின்னம் முடக்கப்பட்டது. சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார்’ என்றார்.