Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பையும் மீறி அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தது ஏன்?: செயற்குழு கூட்டத்தில் இன்று எடப்பாடி விளக்கம் அளிக்கிறார்

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தது ஏன்? என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். அதேநேரம், பாஜக கூட்டணி அமைத்தால் மீண்டும் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதை அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்து, எம்எல்ஏவாக வெற்றிபெற முடியவில்லை என்று அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகிவிட்டார்கள்.

ஆனாலும், பாஜக மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதை பாஜக மேலிட தலைவர் அமித்ஷா கடந்த மாதம் சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து வைத்து கூட்டணியை இருவரும் உறுதி செய்து கொண்டனர். அதேநேரம், அதிமுக - பாஜக கூட்டணி அமைவது குறித்து கட்சி நிர்வாகிகளிடமோ, அதிமுக மாவட்ட செயலாளர்களிடமோ எடப்பாடி பழனிசாமி எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்ததாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் இன்று காலையில் சென்னை வந்து விட்டார்கள். இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை தயாரிக்க, முன்னாள் அமைச்சர்கள், செம்மலை, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்துள்ளார்.

அந்த குழு 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை தயாரித்துள்ளது. கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? திமுகவை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான நிர்வாகிகளிடம் எழுந்துள்ள அதிருப்தியை சரிசெய்ய செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதேநேரம், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால், வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடம் என்பதை வலியுறுத்த சில அதிமுக மூத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.