கோவை: கோவையில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதிகமான பெண் உறுப்பினர்கள் வரும்போது பெண்கள் பிரச்னைகள் அவர்களின் பார்வையில் இருந்து தீர்வு காணப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் தற்போது அதிமுக-பாஜ கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், பொள்ளாச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜ ஏற்றுக் கொள்ளாது” என பதிலளித்தார்.