Wednesday, April 17, 2024
Home » அதிமுகவினருக்கு பிரியாணி விருந்து போட்ட தேமுதிக: திக்குமுக்காடிய தொண்டர்கள்; 3,000 பேர் வெளுத்து கட்டினர்

அதிமுகவினருக்கு பிரியாணி விருந்து போட்ட தேமுதிக: திக்குமுக்காடிய தொண்டர்கள்; 3,000 பேர் வெளுத்து கட்டினர்

by Karthik Yash

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து 5 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி விழுப்புரம் மக்களவை தொகுதியில் அதிமுகவில் போட்டியிடும் பாக்யராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுதாக்கல் செய்த கையோடு தேமுதிக மாவட்ட செயலாளரான முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன், வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். வேட்பாளருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நிர்வாகிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிமுகவினர் திக்குமுக்காடினர். 2 மண்டபங்களில் தேமுதிக ஏற்பாடு செய்திருந்த விருந்தில் இருகட்சியினரும் வெளுத்து கட்டினர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசனும் பந்தியில் அமர்ந்து பிரியாணி விருந்தை ருசித்தனர். இந்த தொகுதியில் போட்டியிடுவது அதிமுகதான். ஆனால் அவர்களே விருந்து வைக்காத பட்சத்தில், கூட்டணியில் சேர்ந்துள்ள தேமுதிக விருந்து வைத்துள்ளது அதன்பின் பல காரணங்களை கொண்டிருக்கிறதாம். சிறிய மீனை போட்டு, பெரிய மீனை பிடிப்பது போல் இந்த பிரியாணி விருந்தை வைத்து தேமுதிக பல எதிர்பார்ப்புகளுடன் அதிமுகவிடம் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

* தென்சென்னையில் ‘முத்தமிழ்’
தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் பெண் வேட்பாளர்கள் பெயர் ‘தமிழ்’ என இருப்பது அனைவரும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. தென்சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இத் தொகுதியில் பாஜ சார்பில் நிற்பவர் தமிழிசை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பெயர் தமிழ்ச்செல்வி. இந்த அபூர்வ ஒற்றுமை வியக்க வைப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.

* நாம் தமிழர் வேட்பாளரால் தேர்தல் அதிகாரி ஷாக்
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட கார்த்திகா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன்பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் படிவத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்தார். அதை வாங்கி உறுதிமொழியை வாசித்த வேட்பாளர் கார்த்திகா ஆண்டவன் மீது சத்தியமாக என்பதற்கு பதிலாக விடுதலை புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக என வாசித்தார். இதை கேட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம் வர்கீஸ் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

* பலா, வாளி சின்னங்களை கேட்டுருக்கேன்: என்னை கேள்வி கேட்க உதயகுமாருக்கு தகுதியில்லை; ஓபிஎஸ் விளாசல்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சியின் சட்ட விரோத போக்கால் தொண்டர்கள் மற்றும் மக்களுடன் கைகோர்த்து தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் பலா, வாளி போன்ற சின்னங்களை கேட்டுள்ளேன். சின்னம் பெரிதல்ல. எனது கடந்த கால அரசியல் வரலாறை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவு மீட்க வேண்டுமென குரல் கொடுக்கப்படும். பிரதமர் மோடியின் நேரடி பார்வையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இருக்கும். இதனால் மாவட்டம் வளர்ச்சியடையும். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டமைத்த அந்த பாதையில் மாறுபடாமல், தொண்டர்கள், பொதுமக்கள் விருப்பப்படி அதிமுகவை மீட்பதே குறிக்கோள்.

அவர்கள் விதித்த சட்ட விதிப்படி ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பப்படி தான் அதிமுகவின் உச்சபட்ச பதவிக்கு தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சட்ட விதிகளை மாற்றவோ, திருத்தவோ, ரத்து செய்யவோ சட்டப்படி உரிமை கிடையாது. ஆனால் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, தனது சுயநலனுக்காக 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 வருடம் தலைமை கழக நிர்வாகியாக இருந்தால் போதும் என்பது உள்ளிட்ட திருத்தங்களை கொண்டு வந்தார். இந்த துரோகத்தை கேள்வி கேட்டதற்கு பரிசாக என் மீது தண்ணீர் பாட்டில் கொண்டு வீசினார்கள். என்னை கேள்வி கேட்க முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றோருக்கு தகுதி கிடையாது. அதிமுகவை மீட்பதற்காக போடப்பட்டுள்ள ஒட்டுமொத்த வழக்குகளிலும் விசாரணை முடிந்து, சாதகமாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.

* எனக்கு மகன் போலதான் விஜயபிரபாகரனும்… ராதிகா ‘ஐஸ்’
பாஜ சார்பில் விருதுநகரில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் ராதிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜ மற்றும் தோழமை கட்சிகளுக்கு நன்றி. மக்களுக்காக சேவை செய்வதற்கு வந்துள்ளேன். பல ஆண்டுகளாக நடிகை என்பதற்கு அப்பாற்பட்டு தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக என்னை மக்கள் பார்த்துள்ளனர்’’ என்றார். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அவரை சிறு வயது முதல் பார்த்து வருகிறேன். எனது மகளுடன்தான் படித்தார். அவர் எனக்கும் மகன் போன்றவர்தான்’’ என்று ராதிகா பதிலளித்தார்.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi