திருமங்கலம்: அதிமுக ஆலமரம் அதனை அழிக்க நினைத்தவர்கள் தான் அரசியலில் அழிந்து போய் உள்ளனர் என அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக இருக்காது என அண்ணாமலை பேசி கொண்டே இருக்கிறார். வரும் 4ம் தேதிக்கு பின்பு அல்ல. அதற்கு பின்பும் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுக மக்கள் இயக்கமாக தமிழகத்தில் இருக்கும். இதனை மறந்து அண்ணாமலை அதிமுக பற்றி பேசி வருவது தொண்டர்களை மனவேதனை அடையச் செய்யும் வகையில் உள்ளது.
அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என கூறி உள்ளார். அதிமுக அணைய போகும் விளக்கு அல்ல. அது அணையா விளக்கு. தமிழகத்தின் கலங்கரை விளக்கு என்பது அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலை தமிழகத்திற்கு நீங்கள் கட்சி தலைவரான பின்பு என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிட்டு காட்ட முடியுமா? இதன்மூலமாக எத்தனை பேர் பயன் பெற்று இருக்கிறீர்கள் என கூறினால், நாங்கள் பொதுவாழ்க்கையிலிருந்து விலகி கொள்ள கூட தயங்கவும் மாட்டோம். அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போய் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை நீங்கள் அறியக் கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை. ஜெயலலிதாவின் புகழை சொல்வதாக கூறி, இன்றைக்கு அதில் ஏதேனும் திசை திருப்புகிற முயற்சியை மேற்கொள்வீர்கள் எனில் ஜெயலலிதாவின் ஆன்மா ஒரு போதும் உங்களை மன்னிக்காது. இவ்வாறு தெரிவித்தார்.