Wednesday, February 21, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு கூட்டணி கட்சிகளுக்காக காத்திருந்த அதிமுக: சிறிய கட்சி தலைவர்கள் கூட வராததால் ஏமாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு கூட்டணி கட்சிகளுக்காக காத்திருந்த அதிமுக: சிறிய கட்சி தலைவர்கள் கூட வராததால் ஏமாற்றம்

by Ranjith

சென்னை: ‘‘ஆளே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க” என்று கூறுவதற்கு ஏற்ப, கூட்டணியில் ஒரு கட்சி கூட இடம்பெறாத நிலையில் நேற்று அதிமுக தொகுதி பங்கீடு குழுவினர், கட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். சிறிய கட்சியின் தலைவர் கூட வராததால் தனியாக ஆலோசனை நடத்தி விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதிமுக சார்பிலும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார பணி குழு, விளம்பர பணி குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு கடந்த வாரம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆலோசனை நடத்தினர். தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து, அதிமுக பிரசார குழு, விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றது. கடந்த 2019 தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜ, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதன்படி, பாமகவுக்கு 7, பாஜவுக்கு 5, தேமுதிகவுக்கு 3, தமாகா-1, புதிய தமிழகம்-1, என்.ஆர். காங்கிரஸ்-1 (புதுச்சேரி) ஆகிய 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதியில் அதிமுக போட்டியிட்டது.

20 தொகுதியில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 20 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. மீதமுள்ள தமாகா, புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம் பெறாமல் பாஜ அணியில் இணைந்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது. அவர்கள் தங்களது நிலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இதுவரை அதிமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கே.பி.முனுசாமி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது யாராவது கூட்டணி கட்சி தலைவர்கள் வருவார்கள் என்று குழுவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒரு சிறிய கட்சியின் தலைவர் கூட வரவில்லை. இது அதிமுக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களுக்குள் சிறிது நேரம் ஆலோசனை நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

இது தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஆளே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க” என்று கூறுவதற்கு ஏற்ப, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் வல்லுநர்கள் கிண்டலாக அதிமுக தலைமையை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பாஜ தலைமையில் தமிழகத்தில் அமையப்போகும் கூட்டணி கட்சியினர் மீண்டும் பிரதமராக மோடியை வெற்றிபெற செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பார்கள்.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர், இந்தியா கூட்டணி வெற்றி பெற தங்கள் அணிக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு கேட்பார்கள். ஆனால் அதிமுகவினர், யாரை பிரதமராக்குவோம் என்று கூறி ஓட்டு கேட்பார்கள் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இதுபோன்ற பல்வேறு குழப்பங்களுக்கு இடையே, அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது தொண்டர்கள் இடையே நகைச்சுவையாக பேசும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

* கடந்த 2019 தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

* பாஜ அணியில் இருந்து வெளியேறியதையடுத்து, வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெறுவதாக இதுவரை அறிவிக்கவில்லை.

You may also like

Leave a Comment

nine − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi