மதுரை: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க அரசாணை வெளியிட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பெண் கவுன்சிலர் நன்றி தெரிவித்தார். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர ஊதியம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்தார். கடந்த வாரம் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. நேற்று, மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், நடந்தது. கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் சொக்காயி, ‘‘உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஒவ்வொரு மாமன்றக்கூட்டத்திலும் முன் வைத்து வந்தேன். அந்த கோரிக்கை கடவுளின் காதுகளுக்கு கேட்டதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேட்டு விட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்குவதாக அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டு விட்டார். இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாநகராட்சியில் கவுன்சிலர்கள் சார்பில் கல்வெட்டு வைக்க வேண்டும்’’ என்றார். அப்போது மாமன்றக் கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் கட்சி பாகுபாடின்றி அனைவரும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.