தஞ்சை: பண மதிப்பிழப்பை கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்து 2016ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பி கல்யாணசுந்தரம் தலைமையில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
அதேபோல் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அதிமுக அரசை கண்டித்து கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில் பங்கேற்ற எம்.பி. கல்யாண சுந்தரம், துணை மேயர் தமிழழகன் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகள் விசாரணை தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. நேற்று இதில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி கனிமொழி உத்தரவிட்டார்.