பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் மலையாளப்பட்டி ஊராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது 2019-2020ம் ஆண்டில் மஞ்சனப்பாறை ஓடை, காந்திநகர் கூட்டு மருதை ஓடை மற்றும் கொட்டாரக்குன்று முருகன் கோயில் ஓடை ஆகிய மூன்று ஓடைகளில் தலா 15 தடுப்பணை வீதம் 45 தடுப்பணைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு தடுப்பணையின் திட்ட மதிப்பு ரூ.77,000 வீதம் 45 தடுப்பணைகள் கட்ட ரூ.34.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி முழுத்தொகையும் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் 6 இடங்களில் மட்டுமே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தடுப்பணைகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சமூக தணிக்கை செய்ததில் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டி விட்டு 45 தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டதாக கூறி அரசு நிதி ரூ.30.03 லட்சம் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறி அப்போதைய காலக்கட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஓவர்சீயராக இருந்த மணிவண்ணன்(52), இளநிலை பொறியாளர் நாகராஜன்(56), வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன்(55) மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களான மலையாளபட்டி துரைசாமி(63), தழுதாழையை சேர்ந்த ராணி(56), சதீஷ்குமார்(39), வெற்றிவேல்(45) என 7 பேர் மீது பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி நேற்று வழக்குப்பதிவு செய்தார்.
இதில் 3 அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் கூட்டுச்சதி செய்துள்ளனர் என குறிப்பிட்டு 120-B, 167, 468, 477 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் மீது நேர்மையற்ற நோக்கத்துடன் போலியான ஆவணங்கள், பொய்யான பதிவுகளை உருவாக்கி கிரிமினல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மணிவண்ணன் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார ஓவர்சியராகவும், அறிவழகன் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), நாகராஜன், சேலம் மாவட்டத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.