சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் தகாத உறவு காலதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி(38). பி.டெக்இன்ஜினியரான இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுக முக்கிய பிரமுகரான இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி பழக்கம் உள்ளவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்துபோனார். மகள் பாரதி நன்றாக படித்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் சேலம் சங்கர் நகரில் உள்ள டியூஷன் சென்டர் ஒன்றில் அவர் பணியாற்றி வந்தார். இதனால் அவர் அங்கேயே தங்கி கொள்வது வழக்கம். மேலும் பெங்களூரில் பாரதி வேலை செய்த போது மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு அடிமையாகி மது மற்றும் சிகரெட் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பல்வேறு தொழில்களுக்கான நிகழ்ச்சி சேலத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் டியூசன் தொடர்பான தகவல்களுக்காக பாரதியும், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிஒஒவாக பணியாற்றி வரும் சேலம் நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண்(49) என்பவரும் மருத்துவம் தொடர்பான தகவலுக்காகவும் சென்றனர். அப்போது பாரதிக்கும் உதயசரணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது தகாத உறவாக மாறியது.
உதயசரணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பாரதி, உதயசரணை மிகவும் அதிகமாக நேசித்தார். பாரதியை கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் உதயசரணுக்காக 10 பவுனில் காப்பு ஒன்றை வாங்கி பாரதி பரிசளித்துள்ளார். ஆனால் அதனை உதயசரண் விற்பனை செய்து செலவு செய்துவிட்டார். இதுபற்றி பாரதிக்கு தெரிய வந்தபிறகே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதமாக தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில் கணவரின் தகாத உறவு விவகாரம் உதயசரணின் மனைவிக்கும் தெரியவந்தது. இதனால் அவர் கணவரை கண்டித்துள்ளார். அப்போது பிரச்னையை விரைவில் தீர்த்து விடுவேன் என கூறி மனைவியை உதயசரண் சமாதானம் செய்து வந்தார். இதற்கிடையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி உதயசரணிடம் வற்புறுத்தியுள்ளார். அப்போது தான், தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் தகவலை உதயசரண் பாரதியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு உதயசரண் மறுப்பு தெரிவித்து வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அவ்வப்போது பாரதியை சமாதானம் செய்த உதயசரண் அவரருடன் உல்லாச வாழ்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் நைட்ஷோ சினிமாவுக்கு சென்றுவிட்டு பாரதி தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்பினர். பாரதி எப்போதும் இரண்டு சிகரெட்டை ஒரே நேரத்தில் அடிப்பது வழக்கம். அதன்படியே அவர் அறையில் சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்குள் மீண்டும் விவாகரத்து பேச்சு தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட நிலையில், உதயசரண் பாரதியை கடுமையாக தாக்கி தள்ளிவிட்டுள்ளார். இதில் கீழே விழுந்த அவரை, தலையணையால் அமுக்கியுள்ளார். இதில் பாரதியின் பின்கழுத்து எலும்பு உடைந்துபோனது. இதையடுத்து அதிகாலையில், உதயசரண் வேலை செய்யும் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சை வரவழைத்து சீலநாயக்கன்பட்டிக்கு பாரதியை கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாரதியின் தாய் பத்மாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக பாரதியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு உறவினர்கள் திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாரதி இறந்துபோன தகவல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாரதியை கொன்றுவிட்டதாகவும், நகையும் திருடப்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாரதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், பாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதயசரணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த டியூஷன் சென்டர் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது இன்னொரு நபரும் அங்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


