Thursday, February 22, 2024
Home » அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட உழவர் சந்தை ₹75 லட்சத்தில் கட்டும் பணி

அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட உழவர் சந்தை ₹75 லட்சத்தில் கட்டும் பணி

by Lakshmipathi

*விரைந்து திறக்க நடவடிக்கை தேவை

*விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாரூர் :அதிமுக ஆட்சியில் மூடுவிழா காணப்பட்ட, தற்போது ரூ.75 லட்சத்தில் உழவர் சந்தை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் நெல் விவசாயிகள் அல்லாத பிற விவசாயிகள் பயனடையும் வகையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதி மூலம் உழவர் சந்தை திட்டம் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டது.

அதன்படி இந்த உன்னதமான திட்டத்தில் விவசாயிகள் பலரும் தங்களது காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். கடைகளுக்கு வாடகை ஏதுமின்றி தராசு படிகற்கள் உள்ளிட்டவையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.இந்நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட அதிமுக ஆட்சியின் போது இந்த உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா காணப்பட்டது.

இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட ஒரு சில உழவர் சந்தைகள் மட்டும் தற்போது வரையில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டியவாறு இந்த உழவர் சந்தையானது இயங்கி வந்தது.இந்நிலையில் இந்த உழவர் சந்தையும் மூடுவிழா காணப்பட்டது. மேலும் இதற்கான கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து தற்போது வரையில் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் இதில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்க்கொள்ளப்படாமல் இருந்து வந்ததது. கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் இருந்து வரும் கடைகளின் மேற்கூரையும் சேதமடைந்தது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சிறந்த ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியதுவம் அளித்து வரும் நிலையில் இந்த உழவர் சந்தை கட்டிடத்தினை சீரமைத்து தர வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த உழவர் சந்தை கட்டிடத்தினை புதுப்பித்து கட்டுவதற்கு எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் பெரும் முயற்சியின் காரணமாக அதிகாரிகள் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இதற்காக அரசு மூலம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த உழவர் சந்தையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணியை கடந்தாண்டு மே மாதம் 19ம் தேதி எம்எல்ஏ பூண்டிகலைவாணன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து உழவர் சந்தைக்கான கொட்டகை மற்றும் கட்டிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 2 அடி உயரத்தில் தரை தளம் அமைக்கப்பட்டு அதன் பின்னர் மேற்கூரைகளுடன் 8 அடி நீளம், 6 அடி அகலம் அளவில் 16 கடைகள் அமைக்கப்பட்ட உள்ளன. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தற்போது நகரின் வளர்ச்சி கருதி ரூ.13 கோடி மதிப்பில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிக்காக ஏற்கனவே இருந்து வந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டு நகர்முழுவதும் ஆங்காங்கே காய்கறி கடைகளாக இருந்து வருவதால் சாலையோரத்தில் தாங்கள் சொந்தமாக விளைவித்த கத்தரி, வெண்டை, சுரைக்காய், பரங்கிகாய், சுண்டைக்காய், பாவை, புடலை உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த உழவர் சந்தையை விரைவாக திறந்திட வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

thirteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi