சேலம்: சிபிசிஐடி போலீசிடம் மாஜி முதல்வர் பற்றி எதுவும் கூற வேண்டாமென என்னிடம் பேரம் பேசுகிறார்கள் என்று ஜெ., கார் டிரைவரின் அண்ணன் தனபால் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஜெ., கார் டிரைவர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், தற்போது அவ்வழக்கு பற்றி பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால், தனபாலிடம் வரும் 14ம் தேதி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம், தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி, சேலம் மாவட்ட எஸ்பியிடம் தனபால் மீது தன்னை தாக்கியதோடு கொல்ல முயற்சித்து வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகார் கொடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் சேலத்திற்கு வந்த தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி கடந்த 2017ல் இருந்தே நான், எனக்கு தெரிந்தவற்றை கூறிக்கொண்டுதான் இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. தற்போது என்னிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி கூடுதல் எஸ்பி, சம்மன் கொடுத்து அழைத்துள்ளார்.
அந்த விசாரணையின் போது என்னிடம் தம்பி கனகராஜ் கூறிய அனைத்து உண்மைகளையும் தெரிவிப்பேன். மாஜி முதல்வர் பற்றி நான் எதுவும் கூறக்கூடாது என என்னிடம் பேரம் பேசுகிறார்கள். கொங்கணாபுரத்தில் உள்ள எனது வீட்டிற்கு மகுடஞ்சாவடி மெயின்ரோட்டில் வசித்து வரும் ஒரு முக்கியபுள்ளி, நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்தார். அவர், கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வரை காட்டிக்கொடுக்காதே. அதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். என்னிடம் பேரம் பேச வேண்டாம் எனக்கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டேன்.
எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும், என் பிள்ளைகளுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார். தற்போது சிலரின் தூண்டுதல்பேரில், கோணகாப்பாடியை சேர்ந்த அதிமுக நிர்வாகி என் மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து, என்னை கோவையில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்படியே சென்றால் என்னை கொன்றுவிடுவார்கள். அதனால் சிபிசிஐடி அலுவலகத்தில் நாளைய தினமே (இன்று) ஆஜராகி தகவல்களை தெரிவிக்க சம்மனை மாற்றிக் கொடுக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வாறு தனபால் கூறினார்.
சிறையில் ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்தனர்; யாரோ சொல்லிக்கொடுத்ததை
கணவர் தனபால் பேசுகிறார்: மனைவி பகீர் குற்றச்சாட்டு
தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது கணவர் தனபால், யாரோ சொல்லிக் கொடுத்ததை கூறுவது போல் இருக்கிறது. இதற்கு முன் அவர் என்னிடம் தற்போது கூறும் தகவல்களை கூறியதே கிடையாது. இப்போது இவர் பேசுவதை பார்த்து எனக்கு பயமாக இருக்கிறது. மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது, மனு போட்டு நான் பார்த்தேன். அப்போது என்னுடன் ஒருவர் வந்தார். அந்த நபர், என் கணவர் தனபாலிடம் பேசினார். அப்போது என் கணவரும், இவர் ஓபிஎஸ் வீட்டில் அண்ணனுடன் இருப்பவர். இந்த தம்பி பார்த்துக் கொள்வார் எனக்கூறினார். அதற்கு நம்மை யாரும் பார்த்துக் கொள்ள வேண்டாம். இதுவரை பார்த்ததெல்லாம் போதும் எனக்கூறிவிட்டேன்.
தற்போது என் கணவர், பேசுவதை பார்க்கும்போது குழப்பமாக உள்ளது. அவரால், எனக்கும், என் பிள்ளைகளுக்கும் ஆபத்து உள்ளது. அதனால்தான் பிரிந்து வந்து தாய் வீட்டில் இருக்கிறேன். அங்கு வந்தும் தகராறு செய்து தாக்கியுள்ளார். என்னை அடித்ததற்காக அவர் மீது தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லாததால், தற்போது எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு செந்தாமரைச்செல்வி கூறினார்.