Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

படப்பையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியில் இருந்து நீக்கம்!

காஞ்சிபுரம்: படப்பையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னம்பலம் ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த இரண்டு பெண்களும், இவரது வாடகை வீட்டிலிருந்து வெளியேறி கீழ்படப்பை பகுதியில் உள்ள மற்றொரு வாடகை வீட்டில் குடியேறி உள்ளனர். ஆனாலும் இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட பொன்னம்பலம் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும், அவரது சக நண்பர்களும் பொன்னம்பலத்தை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பவுள்ளனர்.

இந்நிலையில், பொன்னம்பலத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையிலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையிலும் நடந்துகொண்டுள்ளார். மேலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, எம். பொன்னம்பலம், (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.