திருப்பத்தூர்: பெரியாரையும், அண்ணாவையும் பாஜவிடம் அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டையும் அடகு வைத்து விடுவார்கள் என்று அதிமுக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட, வேலூர் பென்ட்லேண்ட் அரசு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் மற்றும் 7 சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கலைஞர் சிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் திறந்த வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆம்பூர், வாணியம்பாடி, ேஜாலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகளில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முதல் நாள் விழாக்களை முடித்து திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் தங்கினார். 2வது நாளான நேற்று காலை ஏலகிரி மலையடிவாரம் மண்டலவாடியில் அரசு சார்பில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.68.76 கோடியில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.273.83 கோடியில் 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் நலன் மேல் அக்கறை இல்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை நம்முடைய திராவிட மாடல் அரசு, மீட்டெடுத்து, வரலாறு காணாத வளர்ச்சிக்கு நாம் கொண்டு சென்றிருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசால் கூட, நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
அதனால்தான், ஒன்றிய அரசே, தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட, பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக சொல்லியிருக்கிறது. இந்தியாவின் ஜிடிபியில் நம்முடைய பங்கு எவ்வளவு தெரியுமா? 9.21 விழுக்காடு. அதாவது, நாட்டின் வளர்ச்சியில் நூற்றில் பத்து விழுக்காட்டில் நாம் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, சமூக முன்னேற்றக் குறியீடுகளிலும், நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம். உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில், முதலிடம் தமிழ்நாடு, வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் 2வது இடம் நாம் இருக்கிறோம்.
நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும் மருத்துவக் குறியீட்டிலும் 3வது இடம் பணவீக்கம் குறைந்த மாநிலம். நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது. தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில், தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது.
இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி என்று செயல்படாமல், தமிழ்நாட்டின் அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று செயல்படுவதுதான் காரணம். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பது போல் ‘எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்’ என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இதனால்தான், நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளும் வளருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் முக்கியமான கனவுகளில் ஒன்று “குடிசையில்லா தமிழ்நாடு”. அந்தக் கனவை நனவாக்கும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வரும் 2030க்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 6 ஆண்டுகளில், 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தரப் போகிறோம். ஒரு வீட்டுக்கு ரூ.3.50லட்சம் தருகிறோம். கடந்த 2 ஆண்டில் மட்டும் 2லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தோம். அதில், 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டோம். மீதமுள்ள வீடுகள் பணியும் விரைந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. இதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன், கேட்டுகொண்டே இருப்பேன்.
இதேபோல், ஒன்றிய அரசு வீடு கட்டும் திட்டம் இருக்கிறது. யாருடைய பெயரில்? பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் என்று அதற்கு பெயர். ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் நிர்ணயித்திருக்கிறார்கள். இதில், 60 விழுக்காடு நிதி ஒன்றிய அரசும், 40 விழுக்காடு நிதி மாநில அரசும் தர வேண்டும். ரூ.1.20லட்சத்தில் வீடுகட்ட முடியுமா? அதிலும் 60 சதவீதம் அதாவது, ரூ. 72 ஆயிரம் தான் ஒன்றிய அரசு தருகிறது. மீதி கூடுதலாக, நம்முடைய மாநில அரசு, ரூ.1.62லட்சம் வழங்கி வீடு கட்டி தருகிறோம். பெயர்தான் அவர்களுடையது, நிதி நம்முடையது. அதனால்தான், நான் ஏற்கனவே ஒரு டயலாக்கை நினைவுப்படுத்தினேன்.
“மாப்பிள்ளை அவர்தான் ஆனால், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது”. இப்படிதான், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை ஒழுங்காக தருவது இல்லை. தந்தாலும் அரைகுறைதான். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் இதை மீட்ட மண். தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு வரலாறு காணாத அளவிற்கு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். அதேபோல், ரூ.84 கோடி மதிப்பீட்டில் தேவாலயங்களையும், மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது.
அவர்களால் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை. ஓட்டு கேட்க முடியவில்லை, முடியாது. செய்திருந்தால் தான், சொல்ல முடியும். அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் திமுக ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது. இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். தலைவர் கலைஞரால், வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.
அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள் நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும் எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும். உங்களுக்கு அரணாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் எப்பொழுதும் இருப்போம். இருப்போம். அதேபோல, நீங்கள் என்றைக்கும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு பேசினார்.