சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் ஒரு பிரச்னையாக மாறியுள்ளார். ஒரு ஆளுநர் இந்த அளவிற்கு பிரச்னை கொடுத்த வரலாறு தமிழகத்தில் இல்லை. இன்றைக்கு உச்ச நீதிமன்றமே ஒரு கொட்டு கொட்டி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு கால அவகாசம் தேவை என்று மண்டியிட்டு சொல்லி உள்ளது. ஆளுநர் எதற்காக கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளார்.. இதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் ஆளுநர் மறுத்தது ஒரு இழிவான நாகரிகம் அற்ற செயல். அதற்காக ஆளுநர் தலைகுனிந்தாக வேண்டும். அதிமுக- பாஜ பிளவு ஒரு கற்பனையானது. அவர்கள் முடிவு செய்து நடத்தக்கூடிய ஒரு நாடகம். எந்த வகையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று அதிமுக காரணம் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் எதுவும் சொல்லாமல் நேற்று வரை கூட இருந்த நாங்கள் இன்று பிரிந்துள்ளோம் என்று கூறுவது ஒரு நாடகமான செயல். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது அரசியல். அவர்களுடைய சொந்த குடும்ப பிரச்னை கிடையாது. தவறான கதை வசனம் எழுதப்பட்ட ஒரு நாடகம். இவ்வாறு அவர் கூறினர்.