மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமானம் மூலமாக திருச்சிக்குப் புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுகவுக்கு இடையில்தான் போட்டி அமையும். அதிமுகவுடன் பாஜ இருப்பதால், அக்கூட்டணியை வீழ்த்தவேண்டிய தேவை இருக்கிறது. அக்கூட்டணியில் அதிமுக அமைதியாகவும் பாஜ சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகின்றன.
அதிமுகவின் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்தான் நயினார் நாகேந்திரன். அவர் இப்போது தமிழக பாஜ தலைவராகிவிட்டார். அதிமுகவை முழுமையாக விழுங்குவதுதான் பாஜவின் திட்டம். இதை அதிமுக புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆண்ட கட்சி. அது தேய்மானம் அடைவதற்கு அதிமுக உடன்படுகிறதா?
பாஜவுடன் அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமம். மநீம தலைவர் கமலஹாசன் ஆரம்பத்தில் பேசிய அரசியலுக்கும், இப்போதைய அரசியல் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை கமலஹாசன் உணர்ந்துவிட்டதால், அதை காக்க வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார்.
முருகர் மாநாட்டில் பெரியாரை விமர்சனம் செய்த பின்பும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அமைதி காக்கிறார் என்றால், அவர் உண்மையிலேயே பெரியாரை ஏற்றுக்கொண்டாரா, உள்வாங்கிக் கொண்டாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.