நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் 568 பயனாளிகளுக்கு 1,231 உபகரணங்களை ரூ.98 லட்சத்து 86 ஆயிரத்து 773 மதிப்பில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என்று கூறித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக மாறியுள்ளார் என்கின்றனர். அப்படி சொல்லவில்லை என்றால், அந்த பதவியை அவருக்கு கொடுத்திருக்க மாட்டார்கள். அவர் மாநிலத் தலைவராவதற்கு முன்பாக எங்களுடன் என்னவெல்லாம் பேசினார் என்று நாங்கள் நன்றாக அறிவோம். அதை பொதுவெளியில் பேச முடியாது.
அதனால் நயினார் நாகேந்திரன் பதவியை காப்பாற்றுவதற்காக பேசி வருகிறார். திமுகவை வீழ்த்துவது தான் அதிமுக – பாஜ கூட்டணியின் கொள்கை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் கூட்டணி அமைச்சரவையா அல்லது தனி அமைச்சரவையா என்று சொல்ல சொல்லுங்கள். அவர்களுக்குள் இருக்கும் பிரச்னையை முடித்துவிட்டு எங்கள் பக்கம் வரட்டும். வரும் 8ம் தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்காக முன்னேற்பாடு பணிகள் விரைந்து நடத்தப்பட்டு வருகிறது. சிதிலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.