கோவில்பட்டி: கூட்டணியில் இருந்தபோதே தமிழக பிரச்னைகளுக்கு செவி சாய்க்காத பாஜ, அதிமுகவை உடைக்க சதி செய்தது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர அதிமுக மற்றும் மத்திய ஒன்றிய அதிமுகவினருக்கு டிஜிட்டல் வடிவிலான புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேசியதாவது: கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது கட்சியில் பல குழப்பங்கள் இருந்தது. துரோகிகள் இருந்தார்கள். அவற்றை எல்லாம் சமாளித்து நீதிமன்றம் வரை சென்று கட்சியை மீட்டு ஒன்றுபட்ட அதிமுகவை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.
ஒன்றிய பாஜ அரசுடன் கூட்டணியில் இருந்தோம். அப்போது எய்ம்ஸ், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால் அவர்கள், தமிழக பிரச்னைகள் குறித்து செவிசாய்க்கவேயில்லை. மாறாக அதிமுகவை உடைக்க சதி செய்தார்கள். இதனால் அவர்களுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று கூறி கூட்டணியை விட்டு வெளியேறினோம். இவ்வாறு அவர் கூறினார்.