பெரம்பூர்: கொடுங்கையூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கூவத்தில் குதித்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து, அவரை உயிருடன் மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொடுங்கையூர் சின்னாண்டிமடம் கடும்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (45), கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த அவர், வீட்டின் அருகே உள்ள கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு திடீரென குதித்துவிட்டார்.
இதனால் மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கூவத்தில் குதித்ததில் தலையில் அடிபட்டு மேலே வர முடியாமல் நாகராஜ் பாதி மயக்கத்தில் கிடந்தார். இதையடுத்து, காவலர்கள் விஜயகாந்த் மற்றும் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடம் ஏணி வாங்கி உட்புறமாக செலுத்தி கூவத்தில் இறங்கி நாகராஜை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். அதன்பிறகு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கூவத்தில் குதித்த நபரை பக்குவமாக பேசி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த கொடுங்கையூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.