அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 76 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஜூன் 12ஆம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கியதில் 241 விமான பயணிகளும், 5 எம்பிபிஎஸ் மாணவர் உள்பட 29 பேரும் என ெமாத்தம் 270 பேர் பலியானார்கள். ஒரே ஒரு பயணி ரமேஷ் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். இறந்தவர்களின் உடல்கள் கருகியதால் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை119 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 76 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஜய் ரூபானி உடல், அவரது மனைவி அஞ்சலி ரூபானி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் நேற்று குஜராத் நகர சிவில் மருத்துவமனையில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பிற அமைச்சர்களும் உடனிருந்தனர். ரூபானியின் உடல் ராஜ்கோட்டுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். ராஜ்கோட் அருகே உள்ள ஹிராசரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு மணி நேரம் அவரது வீட்டில் வைக்கப்பட்டது.
மாலையில் இறுதிச்சடங்குகள் நடந்தன. இதற்கிடையே டிஎன்ஏ சோதனை மூலம் 119 உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதில் பல உடல்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சிவில் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார். இதுவரை 250 பேரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 72 மணி நேரம் ஆகியும் முடிவுகள் வரவில்லை என்று அங்கு 4 நாட்களாக காத்திருக்கும் உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுபற்றி டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில்,’ டிஎன்ஏ சோதனை எடுத்துக்கொள்ளும் செயல்முறை குறித்து பீதி அடைய வேண்டாம் . இந்த செயல்முறையை விரைவில் முடிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஓரிரு நாளில் அனைத்து உடல்களும் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்படும்’ என்றார்.