அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள், ஊழியர்கள் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பற்றி இருந்ததால் அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் கருகிய நிலையிலேயே மீட்கப்பட்டனர். இதன் காரணமாக டிஎன்ஏ மூலமாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. மொத்தம் 253 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் விமானத்தில் இருந்த 240 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனையில் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக பாஜ சார்பில் நியமிக்கப்பட்ட உள்ளூர் எம்எல்ஏ ஹஸ்முக் படேல் கூறுகையில், ‘‘பொதுவாக நகைகள், தலைமுடி உள்ளிட்டவற்றின் மூலமாக இறந்தவர்களின் உடல்கள் அடையாளப்படுத்தப்படும். விபத்தில் சில உடல்கள் உள்ளுறுப்புகள் வெளியே தெரியும் அளவுக்கு எரிந்த நிலையில் மீட்கப்பட்டு இருந்தது. சில உடல்கள் முழுவதும் கருகிவிட்டன என்பதை கவனித்தோம். சிலரின் உடல்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலோக கம்பி, தட்டுகள், தண்டுகள் போன்றவை பொருத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். இவையும் சிலரது உடல்களை அடையாளம் காணும் செயல்முறையை எளிதாக்க உதவியது” என்றார்.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் 8 மாத குழந்தை த்யான்ஷ் 28% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தது. தற்போது, 8 மாத குழந்தை த்யான்ஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கட்டடத்தில் விமானம் விழுந்ததில் காயமடைந்த மனிஷா கச்சோடியா, அவரது 8 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்து விசாரணைப் பணியகம் கருப்பு பெட்டியின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியதால், இது விபத்தின் காரணத்தை (தொழில்நுட்பக் கோளாறு, மனிதத் தவறு, அல்லது வேறு காரணங்கள்) அறிய முக்கிய தடயங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உட்பட அமைப்புகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன.