அகமதாபாத்: குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய குழு அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதியில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் சிக்கினார்கள்.
விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்த நிலையில் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து உயிர்தப்பினார். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மொத்தம் 265 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து மேலும் சில சடலங்களும், உடல் பாகங்களையும் மீட்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் மீட்பு குழுவினருடன் தேசிய பாதுகாப்பு படை குழுவும் இணைந்துள்ளது. இதனை தொடர்ந்து விபத்தில் பலி எண்ணிக்கையானது 270ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு இதுவரை மொத்தம் 270 உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணும் வகையில் இருந்ததால் டிஎன்ஏ சோதனை தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 8 பேரின் உடல்கள் மருத்துவமனையில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது குறித்து தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்ஏ பரிசோதனையை விரைவுபடுத்துவதற்காக குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் நேற்று தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிய உடல்களை அடையாளம் கண்டறிவதற்காக நேற்று முன்தினம் வரை இறந்தவர்கள் உறவினர்கள் சுமார் 220 பேர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை அளித்துள்ளனர். டிஎன்ஏ சோதனை முடிந்து நேற்று ஒருவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்மூலம் மொத்தம் 9 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற சடலங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து விசாரணை பணியகம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், அகமதாபாத் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கிடந்த விமானத்தின் பாகங்கள் கிரேன் மூலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
இதனிடையே விமான விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்களை இந்த குழு ஆராய்வதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் பிஜே மருத்துவ கல்லூரியின் விடுதி பலத்த சேதமடைந்தது. விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதால் விடுதி காலி செய்யப்பட்டு வருகின்றது. கட்டிடங்கள் 1,2,3 மற்றும் 4 ஆகியவை காலி செய்யப்பட்டு வருவதாகவும் அதில் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
* இங்கி. புலம்பெயர்ந்தோர் நிதி திரட்டல்
விமான விபத்தில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த குடும்பங்களுக்காக இந்திய புலம்பெயர்ந்தோர் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் இறந்த அர்ஜூன் படோலியா இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த தனது மனைவியின் அஸ்தியை கரைப்பதற்காக குஜராத் வந்துள்ளார். திரும்பி செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், 18 நாட்களில் தங்களது தாய் மற்றும் தந்தையை இழந்த 4 மற்றும் 8 வயது சிறுமிகளுக்காக கோ பண்ட் மீ என்ற நிதி திரட்டுவதை தொடங்கியுள்ளனர். இதேபோல் விபத்தில் இறந்த நார்தாம்ப்டனை சேர்ந்த அப்தி படேல் குடும்பத்திற்கும் நிதி திரட்டும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இவர் தனது கணவர் மற்றும் 8 வயது மகனை விட்டுச்சென்றுள்ளார். மேலும் விபத்தில் இறந்த அகில், ஹேன்னா அவர்களது 4வயது மகள் சாரா ஆகியோரின் குடும்பத்துக்கு உதவுவதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் நிதி திரட்டி வருகிறார்கள்.
* இங்கி. மன்னர் சார்லஸ் மவுன அஞ்சலி
மன்னர் மூன்றாம் சார்லசுக்கு நவம்பரில் தான் பிறந்த நாள் என்றாலும் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டமாக ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பின் முடிவில் கையில் கருப்பு நிற பட்டை அணிந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்.
* ஏர் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை
அகமதாபாத் விமான விபத்தை அடுத்து ஏர் இந்தியா தனது போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளும்படி விமான ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ உத்தரவிட்டு இருந்தது. ஏர் இந்தியாவிடம் மொத்தம் 33 போயிங் 787 விமானங்கள் உள்ளன. இது தொடர்பாக ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில்,‘‘ஏர் இந்தியாவின் 9 போயிங் 787 ட்ரீம்லைனர்களில் ஒரு முறை பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 விமானங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளது.
* அகமதாபாத் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் பலியாகி விட, 11 ஏ சீட்டில் பயணம் செய்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் தப்பி விட்டார். இதே போல் 1998ல் தாய்லாந்தில் நடந்த விமான விபத்திலும் தாய் ஏர்வேஸ் விமானம் ஏர்பஸ் ஏ310ல் 11ஏ சீட்டில் பயணித்த ஜேம்ஸ் ருவாங்சக் லோய்ச்சுசக் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. ஒன்று 1998ல் நடந்த விபத்து.
இன்னொன்று 2025ல் இப்போது அகமதாபாத்தில் நடந்த விபத்து. ஆனால் உயிர் தப்பிய பயணிகள் இருவரும் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் என்பதுதான் இதில் மிகவும் ஆச்சர்யமான ஒன்று. அகமதாபாத் விபத்தில் 11 ஏ சீட்டில் இருந்த விஸ்வாஸ்குமார் ரமேஷ் உயிர்பிழைத்த தகவல் அறிந்ததும் 27 ஆண்டுகளுக்கு முன் அதே இருக்கையில் அமர்ந்து உயிர் தப்பிய ஜேம்ஸ் ருவாங்சக் லோய்ச்சுசக் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
தாய்லாந்தைச் சேர்ந்த நடிகரும், பாடகருமான ஜேம்ஸ் ருவாங்சக் லோய்ச்சுசக் 1998 ஆம் ஆண்டு தாய் ஏர்வேஸ் விமானம் டிஜி261ல் பயணம் செய்த போது தெற்கு தாய்லாந்தில் உள்ள சூரத் தானியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானார். அந்த விமானம் பாங்காக்கிலிருந்து புறப்பட்டது. ஆனால் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 146 பேரில் 101 பேர் கொல்லப்பட்டனர். அதில் 11ஏ சீட்டில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் ருவாங்சக் லோய்ச்சுசக்கும் ஒருவர்.
அகமதாபாத் விபத்தில் 11 ஏ சீட்டில் இருந்த ரமேஷ் தப்பிய தகவல் அறிந்ததும்,’இந்தியாவில் ஒரு விமான விபத்தில் இருந்து தப்பியவர் என் இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த இருக்கை எண் 11ஏ’ என்று ஜேம்ஸ் எழுதியுள்ளார். ஆனால் தாய் ஏர்வேஸ் விபத்தில் பலர் உயிர் பிழைத்திருந்தனர். அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் ஒரே ஒருவர், ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* விமானத்தில் பயணிக்க எந்த இருக்கை பெஸ்ட்?
அகமதாபாத் விமான விபத்தில் 11 ஏ சீட்டில் பயணித்த விஸ்வாஸ்குமார் ரமேஷ் மட்டும் தப்பிப்பிழைத்ததும், விமானத்தில் பயணிக்க எந்த இருக்கை பெஸ்ட் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவை சேர்ந்த விமான பாதுகாப்பு பவுண்டேஷன் இயக்குனர் மிட்செல் பாக்ஸ் கூறும்போது,’ விமானங்கள் இருக்கை உள்ளமைவுகளில் பரவலாக வேறுபடுகின்றன.
விபத்துக்களின் தன்மை உள்ளிட சிக்கலான காரணிகளின் அடிப்படையில் பயணிகள் தப்பிக்கலாம். ஒவ்வொரு விபத்தும் வேறுபட்டது, மேலும் இருக்கையின் அடிப்படையில் உயிர்பிழைப்பதை கணிக்க முடியாது’ என்றார். முக்கிய நிபுணர்கள் கூறுகையில்,’ 1971 முதல் நடந்த விமான விபத்துக்கள் அடிப்படையில் விமானத்தின் பின்புறம் அமர்ந்து பயணிப்பவர்கள் உயிர்பிழைக்கும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தனர்’ என்றனர்.